பிற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என அதிமுகவில் எந்த விதியும் இல்லை - ஓபிஎஸ்
அதிமுக-வில் பிற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என எந்த விதியும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
டெல்லிக்கு தனிப்பட்ட பயணமாக சென்று இருந்தேன். அரசியல் ரீதியான பயணம் அல்ல. அரியானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு பிரதமருக்கு கடிதம் முலமாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளேன். அரியானாவில் ஆளும் கட்சியாகவும் ஜம்மு- காஷ்மீரில் பிரதான எதிர்கட்சியாகவும் பா.ஜ.க. வந்து உள்ளது.
தளவாய் சுந்தரம் நீக்கம் குறித்து கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்றது அவரது தனிப்பட்ட உரிமை. இது பற்றி அவர் தான் விளக்க வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்தது தவறு. பிற அமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று சட்டம் எதுவும் அதிமுகவில் இல்லை.
விமான சாகச நிகழ்ச்சியின் முன் ஏற்பாடு செய்யப்படவில்லை. லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் போது குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்ய அரசு தவறி விட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம் 15 நாட்கள் நடத்த போது சின்ன அசம்பாவிதமும் நடக்காமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது.
அதிமுக ஒன்றாக இணைந்தால் வெற்றி பெற முடியும். உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். இல்லை என்றால் தொண்டர்கள் உணர வைப்பார்கள் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
No comments