தமிழக அரசு மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடு..... சுகாதாரத் துறை செயலாளர் அதிரடி உத்தரவு.....
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனை முதன்மை டீன்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக கழிவறைகள் தூய்மையாக இல்லை. மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது. நோயாளிகள் பயன்படுத்தும் சர்க்கர நாற்காலிகள், காத்திருப்பு மேஜைகள் போன்றவைகள் உடைந்தும் சேதமடைந்தும் காணப்படுவதோடு துருப்பிடித்தும் காணப்படுகிறது.அரசு சார்பில் நோயாளிகளின் நலனுக்காக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் அதற்கான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினாலும் உரிய உரிமம் பெறாத காரணத்தினாலும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடமிருந்து மற்றொருவருக்கு நோய்கள் பரவாமல் இருக்க முக கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
உணவின் தரத்தை மேம்படுத்துவதோடு மருத்துவமனையில் உள்ள உணவு மையங்களில் மாதந்தோறும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்குவதோடு நீர்த்தேக்க தொட்டிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது. மேலும் இந்த பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments