• Breaking News

    தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் சாப்பாடு இல்லை..... அதிமுக மாநாடு போல் ஆகிவிடகூடாது என நினைக்கும் விஜய் தரப்பு.....

     


    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளார் நடிகர் விஜய். தமது கட்சியின் முதல் மாநாட்டை வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துகிறார்.கட்சியின் கொள்கை, இலக்குகளை முன் வைக்கும் திருவிழாவாக இம்மாநாடு இருக்க வேண்டும் என்று விஜய் ஏற்கனவே கூறி இருக்கிறார். மாநாட்டுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடு பணிகள் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளன.

    மொத்தம் 27 குழுக்களின் உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் மாநாட்டு பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. எப்படியும் 5 லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 50 ஆயிரம் இருக்கைகளே போடப்பட்டுள்ளன. அதற்கு மேல் வருபவர்கள், நின்று கொண்டே மாநாட்டை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநாட்டு மேடையில் நடிகர் விஜய் நடந்து சென்று (ramp walk) தொண்டர்களை பார்க்கும் வகையில் 800 மீட்டர் தூரத்துக்கு நடைமேடை அமைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத மாநாட்டு ஏற்பாடு பணிகள் முடிந்துவிட்டன.

    இப்படி ஏகப்பட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கும் நிலையில் வரக்கூடிய தொண்டர்களுக்கு உணவு உபசரிப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுபற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு வழங்குவதை கட்சி நிர்வாகம் தவிர்த்து உள்ளதாக தொண்டர்கள் கூறுகின்றனர்.அதற்கான வலுவான காரணமும் முன் வைக்கப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டு மதுரை அ.தி.மு.க., பொன்விழா மாநாட்டின் போது டன் கணக்கில் உணவு வீணானது. தொண்டர்கள் மத்தியில் இந்த விவகாரம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, பொன்விழா மாநாடு பற்றிய செய்திகள் இந்த உணவு வீணான விவகாரத்தில் மக்களிடம் எடுபடாமல் போய்விட்டதாக விஜய் தரப்பில் நினைக்கின்றனர்.எந்த வகையிலும் அப்படி ஒரு நெகட்டிவ் விஷயம் தமது கட்சி மாநாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தொண்டர்களுக்கு உணவு வழங்குவது இம்முறை தவிர்க்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தொண்டர்களுக்கு அந்தந்த மாவட்டத்தின் தற்காலிக பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் உணவுகளை ஏற்பாடு செய்து கொள்ளவும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாம்.

    அதன்படி, விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான ஓட்டல்களில் இப்போது உணவுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. உணவு வீண் ஆகக்கூடாது என்பது நல்ல எண்ணம் தான். அதற்காக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு கட்சி சார்பில் உணவு ஏற்பாடு செய்யாமல் இருப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்ற புகைச்சலும் ஒரு சிலர் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், 'மாநாடு தான் முக்கியம், சோறா முக்கியம்' என்று கேட்கும் தீவிர ரசிகர்களும் நிறையப்பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதே தற்போதுள்ள நிலவரம்....!

    No comments