நாகர்கோவில்: ஆலோசனைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர்

 


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் மாவட்ட சூப்பரண்ட் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் எம்.பி. ஏ பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பெற்றோர் இறந்து விட்டனர். எனது தாயாரின் ஓய்வூதிய பணம் கிடைப்பதற்காக என் தோழியின் அறிவுறுத்தலின் பெயரில் கோர்ட்டில் வழக்கு தொடர நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் ஒருவரை சந்தித்து பேசினேன்.

அதில் கடந்த 09.06.2023 அன்று என்னை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் வழக்கு தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக் கூறி அவருடைய அலுவலகத்திற்கு வரவழைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதனை வீடியோவாகவும் செல்போனில் பதிவு செய்து மிரட்டி வந்தார். இந்நிலையில் நான் கர்ப்பமானேன். பின் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து அந்த கருவையும் கலைத்து விட்டார் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக வக்கீலிடம் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் எனது ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் எனவும் மிரட்டினார்.

ஆகவே சம்பந்தப்பட்ட வக்கீல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் புகார் மீது அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வக்கீல் மீது வழக்கு பதிவு செய்ததோடு தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments