ஏழை வியாபாரிகள் சாக வேண்டும்..... பணக்கார வணிகர்கள் வாழ வேண்டும்..... தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலுவின் பாலிசி......

 


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு நேற்று செய்தியாளர்களுக்கு திருச்சி என்எஸ்பி  ரோட்டில் பேட்டி அளித்தார்.

 அப்பொழுது தரைக்கடை வியாபாரிகளால் பெரிய வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருமான இழப்பு ஏற்பட்டு வருவதாக  சொன்னார்.ஆனால் அவர் அருகில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெரு வணிகர்கள் யாருமில்லை.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு பத்திரிகையாளர்களிடம்  தகங்களைப்பற்றி பேசுவதை அறிந்த தரைக்கடை வியாபாரிகள் கும்பலாக திரண்டு வந்து ஒரு  வணிக நிறுவனத்திற்கு முன்பு  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது  கோவிந்தராஜுலுவின் செயலுக்கு  எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியபடியே தரைக்கடை வியாபாரிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்த   தரைக்கடை வியாபாரி  ஒருவர் தமது பொழைப்பை கெடுக்க நினைக்கும் வணிகர் சங்க நிர்வாகிகளை கண்டித்து தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். 

அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.காவல்துறையினர் தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு பாதுகாப்பாக  அமர வைத்தனர். அந்த  வியாபாரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இப்பிரச்சினை குறித்து தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள்  கூறுகையில்..,

 வணிகர் சங்க நிர்வாகி வி கோவிந்தராஜுலு எங்களை மிரட்டுகிறார்.நாங்கள் யாரையும் மிரட்டவில்லை.தொல்லை தருவதும் இல்லை.எப்போதும்  பொதுமக்களுக்கு இடையூறாக நாங்கள் இருந்தது இல்லை.

 கோவிந்தராஜூலு எங்கள் மீது சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என சொல்கின்றார் .நாங்கள் தயார் நிச்சயமாக விசாரணை நடக்கட்டும் அப்போது  பல விசயங்கள் வெட்ட வெளிச்சத்துக்கு வரும்.எங்கள் மீது ஏன் கோவிந்தராஜூலுவுக்கு இவ்வளவு கோபம் என்பது ஊரறிந்த விஷயம்.

 தரைக்கடை வியாபாரிகளின் தொழிலை அடியோடு அழிக்க துடிக்கிறார்.அன்றாட வாழ்க்கைக்கு பிழைப்பு நடத்தும் தரைக்கடை  வியாபாரிகளான எங்கள் மீது அவருக்கு இவ்ளோ வன்மம் கூடாது.எங்களை சாகடிக்க  வேண்டும் என துடிக்கிறாரா..? ஒட்டுமொத்த வியாபாரிகளுக்கும்தான் வணிகர் சங்கம் ஆனால்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்துகொண்டு கோவிந்தராஜூலு பண முதலைகளுக்கு ஆதரவாகவும் அன்றாட குடும்ப செலவுக்கு பிழைப்பு நடத்தும் தரைக்கடை வியாபாரிகளுக்கு விஷமாகவும் செயல்பட்டுகொண்டிருக்கிறார். அவருடைய பாலிசியே ஏழை வியாபாரிகள் சாக வேண்டும், பணக்கார வணிகர்கள் வாழ வேண்டும் என்பது தான்.

பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் கோவிந்தராஜுலுவிடம் பதினொன்றும் செய்யும் என தரைக்கடை வியாபாரிகள் குமுறுகின்றனர்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து வணிகர் சங்கங்களின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலுவோ அல்லது அந்த சங்கத்தினை சேர்ந்தவர்கள் கருத்துக்கள் தெரிவித்தால் வெளியிட தயாராக உள்ளோம்.

Post a Comment

0 Comments