தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை..... கனமழையில் காரைக்குடி முதலிடம்.....

 


தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. காரைக்குடியில் அதிகபட்சமாக, 154 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அரியக்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதை உள்ளது. நேற்று பெய்த கனமழையில் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுரங்கப் பாதை தண்ணீரில் இறந்த நிலையில் ஒருவரது உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments