சென்னை மெரினாவில் இன்று விமான சாகச நிகழ்ச்சி..... போக்குவரத்து மாற்றம்......
இந்திய விமானப்படை தொடங்கி 92 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சென்னையில் இன்று விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 72 ரக விமானங்கள் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட இருக்கும் நிலையில் பொதுமக்கள் காண்பதற்கு இலவசமாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற இருக்கும் நிலையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு வாலாஜா சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்பிறகு காமராஜர் சாலை வழியாக திருவான்மியூரில் இருந்து பாரீஸ் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உரிய பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் அருகே பார்க்கிங் செய்ய அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு அனுமதி பெறாத மற்ற வாகனங்களுக்கு 17 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடங்கள் காலை 9:30 மணியுடன் மூடப்படும். எனவே தனியார் வாகனத்தில் வரும் மக்கள் முன்கூட்டியே வரவேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதோடு போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் அண்ணா சாலையில் இருந்து மாநகர பேருந்துகள் வாலாஜா சாலை, ஆர்கே சாலை, மந்தைவெளி மற்றும் மயிலாப்பூர் வழியாக செல்லலாம் என்றும் கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்கே சாலை, அண்ணா சாலை வழியாக பயணிக்கலாம் என்றும், பிற வணிக வாகனங்கள் அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஆர்கே சாலை மற்றும் வாலாஜா சாலை போன்றவற்றை இன்று மாலை 4 மணி வரையில் செல்வதற்கு தடைவிதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments