• Breaking News

    சென்னையில் நடைபெற்ற விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நிறைவு

     


    இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

    மெரினா கடற்கரைக்கு இன்று காலை 7 மணியில் இருந்தே பொதுமக்கள் வர தொடங்கினார்கள். கோவில் திருவிழாக்களுக்கு செல்வது போன்று கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் மெரினா கடற்கரை நோக்கி பொதுமக்கள் குடும்பத்தோடு படையெடுத்தனர்.

    மெரினா கடற்கரை சாலை பகுதி மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அமதிக்கப்படவில்லை. இதனால் தங்களது வாகனங்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டு கடற்கரைக்கு மக்கள் நடந்தே சென்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாரை சாரையாக ஆண்களும் பெண்களும் நடந்து சென்றனர். வெயிலை சமாளிப்பதற்காக குடைகளையும் அவர் கொண்டு சென்றனர்.

    இதனால் மெரினா முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டது. குடைகளை பிடித்தபடி மக்கள் வான் சாகச நிகழ்ச்சியை காண குவிந்தனர். சரியாக 11 மணிக்கு விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியது. சுமார் 72 விமானங்கள் பங்கேற்று சாகசங்களை அரங்கேற்றின. வானில் வட்டமடித்த விமானங்களை பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி  கண்டுரசித்தனர்.

    விமானப் படை வீரர்கள் வானுயரப் பறந்த ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து குதித்து, பாராசூட்டைப் பயன்படுத்தி தரையிறங்கிய காட்சி அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2003-ம் ஆண்டு சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.  21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் விமான சாகச நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    No comments