• Breaking News

    தீபாவளி பண்டிகையை ஒட்டி நாகையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

     

    நாகை: எதிர்வரும் அக்டோபர் 31 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்களை ஆய்வு செய்து, பாதுகாப்பான உணவு  மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்படி, நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ்  வழிகாட்டுதல் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அவரவர் பணி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

    அந்த வகையில் நேற்று நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் நாகப்பட்டினம் பகுதியில் செயல்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் உற்பத்தி செய்யும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பிற்கு தரமான மூலப் பொருட்கள் மட்டுமே உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்ற நிறுவனங்களில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும், தயாரிப்பு விபரங்கள் இல்லாத, காலாவதியான மூலப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. இனிப்பு வகைகளில் உணவு பாதுகாப்பு துறை அனுமதித்துள்ள நிறமிகளை, அனுமதிக்கப்பட்ட அளவுகளில் ( 100 பி.பி.எம்  ) மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயற்கை நிறங்கள் பயன்படுத்தலாம். கார வகைகளில் எந்தவொரு நிறங்களும் பயன்படுத்தக் கூடாது. தரமான சமையல் எண்ணெய் வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தரமான நெய் பயன்படுத்த வேண்டும். கரூர் நெய் என்ற பெயரில் கிடைக்கும் போலியான நெய்யை சமையலுக்கோ அல்லது இனிப்பு கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. 

    உணவை கையாளும் நபர்கள் தன் சுத்தம் பேண வேண்டும், தலை மற்றும் கைகளில் உறைகள் அணிந்து உணவு தயாரிப்பில் ஈடுபட வேண்டும். தயாரித்து விற்பனை செய்யப்படும் அடைக்கப்பட்ட வகைகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட தயாரிப்பு விபரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளுக்கு முரணாக செயல்படும் அனைத்து வகையான நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. 

    மேலும், இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை உட்பட எந்தவிதமான உணவு விற்பனை குறித்து புகார்களை மாநில உணவு பாதுகாப்பு ஆணையரகத்தின் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். புகார்தாரர் பற்றிய தகவல்கள் வெளியாகாது. ரகசியம் பாதுகாக்கப்படும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை காலத்தில் பாதுகாப்பான உணவை பயன்படுத்தி, தங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொண்டு பண்டிகையை கொண்டாட வாழ்த்துக்களை உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    மக்கள் நேரம் எடிட்டர் மற்றும் நாகை மாவட்டம் நிருபர் 

    ஜி.சக்ரவர்த்தி 

    விளம்பர தொடர்புக்கு 9788341834

    No comments