தேனி: ஹாஜி கருத்தராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் பனை விதை நடும் விழா
தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம் ஆகும். இது எந்த தட்பவெட்ப நிலையிலும் தளைத்து வளரக்கூடியது. தனது சல்லி வேர்கள் மூலம் மழை நீரை அதிக அளவு பூமிக்குள் சேமித்து வைக்கும் திறன் பெற்றது. மண்ணரிப்பை தடுக்க கூடியது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த பனை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் தேனி மாவட்டம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகளை நடும் திட்டத்தை நம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் பனை மரங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு துறைகளின் கூட்டு முயற்சியாக பனை விதைகள் நடவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் உடற்கல்வி துறை மற்றும் நன்செய் அறக்கட்டளை இணைந்து கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் நடும் விழா அக்டோபர் 24ம் தேதியன்று மிகச்சிறப்பாக நடந்தது.
கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஹாஜி. முனைவர். எஸ் .சிராஜ்தீன் முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தில் நன்செய் தொண்டு நிறுவன அமைப்பின் நிறுவனர் பசுமை செந்தில் மூலம் வழங்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பனை விதைகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர். ப. அக்பர் அலி அவர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.
விழா மிகச்சிறப்பாக நடைபெற்றமைக்கு கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி . எம். தர்வேஸ் முகைதீன் மற்றும் மேலாண்மை குழு தலைவர் ஹாஜி. எஸ். முகமது மீரான் அவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பணி அலுவல் காரணமாக சென்றிருந்த கல்லூரியின் முதல்வர் ஹாஜி. ஹெச். முகமது மீரான் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பேராசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் மற்றும் நன்செய் தொண்டு நிறுவன ஆர்வலர்களுக்கும் தெரிவித்து கொண்டார்.
No comments