• Breaking News

    தொழிலாளர்கள் போராட்டத்தால் சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.750 கோடி இழப்பு

     


    சாம்சங் இந்தியா' தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரிய விண்ணப்பத்தின் மீது, உடனடி நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில், சங்க நிர்வாகி எல்லன் தாக்கல் செய்த மனு, நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''தங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தக் கூடாது என, தொழிலாளர் நல துணை ஆணையரிடம், சாம்சங் நிறுவனம் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

    இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, தொழிற்சங்க பதிவாளர் மற்றும் தொழிலாளர் நல துணை ஆணையருக்கு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மனு, நேற்று நீதிபதி மஞ்சுளா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.சாம்சங் நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, ''நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் துவங்குவது, அடிப்படை உரிமையாகாது. நிறுவன நடவடிக்கையில், அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது. வர்த்தக குறியீடான சாம்சங் என்ற பெயரை, தொழிற்சங்கம் பயன்படுத்த முடியாது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், 750 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் எங்களையும் இணைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

    தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ''தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை தென்கொரியாவில் சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் துவக்கப்பட்டுள்ளது. பல தொழிற்சங்கங்கள் அந்தந்த நிறுவனங்களின் பெயரில் துவங்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கத்துக்கும் தொழிலாளர் நலத்துறைக்கும் இடையிலான வழக்கில் நிறுவனத்தை கேட்க வேண்டியதில்லை'' என்றார்.இதையடுத்து, சாம்சங் நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்று, நவம்பர் 11 க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

    No comments