தவெக மாநாட்டில் மாயமான நிலையில் 74 கி.மீ நடந்து போராடி வீட்டுக்கு வந்த சிறுவன்
விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவ சமுத்திரம் பகுதியில் இருந்து விஜய் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் மகேஷ் என்ற சிறுவன் வந்துள்ளார். மாநாடு முடிந்ததும் சிறுவன் தனது குழுவை தவறவிட்டார்.
அவரது கையில் செல்போன் இல்லை. இதற்கிடையே மகேஷ் காணாமல் போனது குறித்து அவரது தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மகேஷின் குடும்பத்தினர் பரிதவித்தனர். மறுபுறம் மகேஷ் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஒரு லாரி ஓட்டுனரிடம் தன்னை கிருஷ்ணகிரியில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். ஆனால் மறதியால் லாரி ஓட்டுநர் சிறுவனை சேலத்திற்கு அழைத்து சென்றார். அங்கிருந்து ஓட்டுநர் ஒரு சிறிய தொகையை கொடுத்து கிருஷ்ணகிரி செல்லுமாறு சிறுவனிடம் கூறியுள்ளார்.ஆனால் போதுமான பணம் இல்லாததால் பேருந்தில் இருந்து சிறுவன் பாதி வழியில் இறங்கினார். அதன் பிறகு மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.
அப்போது ஒரு முதியவர் சிறுவனை பார்த்து விசாரித்து நடந்தவற்றை தெரிந்து கொண்டார். பின்னர் மகேஷுக்கு உணவு வாங்கி கொடுத்து, குளிக்க வைத்து புத்தாடை வாங்கி கொடுத்துள்ளார். அதன் பிறகு பயணச் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். அதனை வாங்கிக் கொண்டு மகேஷ் பத்திரமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார். மகேஷை பார்த்தவுடன் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் வரவேற்றனர்.
No comments