திருவள்ளூர்: 1500 ஏக்கருக்கும் மேலான நெற்பயிர் நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு..... விவசாயிகள் வேதனை
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலியம்பேடு பூங்குளம் அகரம் ஊராட்சியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட நெற்பயிர் விளைநிலங்களில் தற்போது நடவு செய்யப்பட்டு முழங்கை அளவிற்கு நெற் பயிர் வளர்ந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மிக கனமழை இப்பகுதியில் பெய்தது.
இதன் காரணமாக ஆறுகள்,ஏரிகள்,குளம்,குட்டை என அனைத்தும் நிரம்பி வழிந்து உள்ள நிலையில் சேலியம்பேடு மற்றும் கீரப்பாக்கம் இடையே உள்ள பகுதியில் பயிரிட்டுள்ள விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இந்த நிலங்களுக்கு அருகாமையில் வெள்ளநீர் வடிவதற்கான கால்வாய் ஓடையை அடைத்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி மன்றம் சார்பில் கரை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கரையின் அளவு வயல்களில் இருந்து நீர் வெளியேறும் அளவை விட அதிகம் உள்ள காரணத்தால் வயல்களில் உள்ள நீர் வெளியேறாமல் வயல்களிலே தங்கி விட்டது.
இதனால் வளர்ந்து வரும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.இன்னும் ஓரிரு தினங்களில் தண்ணீர் வடியாத சூழலில் ஒட்டுமொத்த நெற்பயிர்களும் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் இப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஊரக வளர்ச்சி துறை மற்றும் விவசாயத் துறை, பொதுப்பணித்துறை இணைந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments