சென்னை: போனுக்கு பதில் 'செங்கல்' - டெலிவரி ஊழியர்கள் கைது
சென்னை, அரும்பாக்கத்தில் 'பார்சல் சர்வீஸ்' நிறுவனம் நடத்தி வருபவர் நாராயணன். 38. இவரது நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு 'டெலிவரி' செய்யும் பொருட்களுக்கு பதில், செங்கல்லை வைத்து டெலிவரி செய்வதாக புகார் வந்தது.இதில், 10 லட்சம் மதிப்புள்ள 13 மொபைல்போன், ஒரு லேப்டாப் திருடப்பட்டது தெரிந்தது.
சந்தேகமடைந்த நாராயணன், கடந்த ஜூனில் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, மாயமான மொபைல்போன்களின் ஐ.எம்.இ.ஐ., எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்த போது, பார்சல் நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டேரியைச் சேர்ந்த தினேஷ், 20, என்பவர் பயன்படுத்தியது தெரிந்தது.
அவரை பிடித்து விசாரித்த போது, வாடிக்கையாளர்களுக்கு மொபைல்போன்களை டெலிவரி செய்ய செல்லும் போது, சிலர் வீட்டில் இருப்பதில்லை. அந்த பார்சலை பிரித்து மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு, அதில் கற்களை வைத்து, மீண்டும் நிறுவனத்தில் ஒப்படைப்பேன்.
வாடிக்கையாளர் கேட்கும் போது, வேறு ஊழியர் டெலிவரி செய்வதால், சந்தேகம் வரவில்லை என, போலீசில் தெரிவித்துள்ளார்.இதற்கு உடந்தையாக இருந்த, இவரது கூட்டாளியான அயனாவரத்தைச் சேர்ந்த அஜித், 25, என்பவரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர்களிடமிருந்து, நான்கு போன்களை பறிமுதல் செய்தனர்.
No comments