திருவண்ணாமலை: அரசு கல்லூரி கழிவறையில் கூட்டம் கூட்டமாக குடும்பம் நடத்திய பாம்புகள்

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மொத்தம் 8500 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் சுமார் 4500 பெண்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் அறை அருகில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாம்புகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கழிப்பறையில் உலாவிய பாம்பு கூட்டங்களை கல்லூரி மாணவி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம்  அங்கு பயிலும் மாணவிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் சுகாதாரமான கழிப்பறை இல்லாதது உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

கல்லூரி நிர்வாகம் சார்பில்; “இங்கு நிறைய பாம்புகள் உள்ளன, உள்ளே செல்ல வேண்டாம் ” என்று எச்சரிக்கை நோட்டீஸ் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை சுற்றி முட்புதர்கள் மேலும் கழிப்பறை சுத்தம் செய்யாமல் காணப்படுவதால் பாம்புகள் வருவதற்கு வழிவகுக்கிறது. முட்புதர்களையும், கழிப்பறையையும் சுத்தம் செய்து, சுகாதாரமான கழிப்பறையாக உருவாக்க வேண்டும் என்பதே அக்கல்லூரி மாணவிகளின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அதுமட்டுமின்றி, போதுமான தூய்மைப் பணியாளர்களை நியமனம் செய்து கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் கூறுகையில் , பெண்கள் கழிப்பறையில் பாம்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறை ஒரு பாம்பை பிடித்துச் சென்றனர் என்றும், கழிவறை தூய்மைப்படுத்தவும் சுற்றுப்புற இடங்களை தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Post a Comment

0 Comments