திருவள்ளூர்: விவசாயிகளின் பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து மூன்று மணி நேரம் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மெதூர்,கோளூர்,திருப்பாலைவனம் உள்ளிட்ட பகுதிகள் தஞ்சை மாவட்டத்திற்கு அடுத்ததாக நெற்பயிர் சாகுபடி செய்து விளைச்சலை அதிகம் கொடுக்கும் பகுதிகளாகும். மூன்று போகம் விவசாயம் நடைபெறும் இந்த பகுதிகளில் கடந்த மிக்சாம் புயல் காரணமாக சுமார் 5000 ஏக்கருக்கு மேல் நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்தது.
இந்த பயிர்களுக்கு விவசாயிகள் இன்சூரன்ஸ் செய்திருந்த நிலையில் பாதிப்படைந்த இப்பகுதியில் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து தற்போது ஆங்காங்கே விவசாயிகள் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று பழவேற்காடு பொன்னேரி நெடுஞ்சாலையில் மெதூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர் தங்களுக்கு உரிய இன்சூரன்ஸ் தொகையினை வழங்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள விவசாயிகள் தொடர்ந்து கடும் வெயிலில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பழவேற்காடு பொன்னேரி நெடுஞ்சாலையில் இரு பக்கமும் வாகனங்கள் நின்று உள்ளன. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ்க்கு விவசாயிகள் வழிவிட்டு அனுப்பி வைத்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு நாளில் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தது தொடர்ந்து மூன்று மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.
No comments