திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து சுவாமி, அம்பாள் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு நான்கு வீதிகளிலும் உலா வந்து, அதன் நிலைய வந்தடைந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேரானது நான்கு வீதிகளிலும் உலா வந்தது.
தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து அரோகரா என கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
No comments