• Breaking News

    பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் தங்கத்தேர் வெள்ளோட்டம்... அமைச்சர்கள் வடம் பிடித்து தங்கத்தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்

     

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். இந்த கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடிந்து கடந்த ஜூலை 12ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

    கடந்த 2022 - 23 சட்டமன்ற மானிய கோரிக்கை அறிவிப்பின்படி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு தங்கத்தேர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 11கிலோ தங்கம், 27கிலோ வெள்ளி, 379 செம்பு ஆகியவற்றை உருக்கி தங்கத்தேர் செய்யப்பட்டது. சுமார் 8.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11.5 அடி உயரத்தில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டு பிரம்மன் தேரோட்டியாக தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் இன்று தொடங்கப்பட்டது. 

    உற்சவர் அலங்காரத்துடன் தங்கத்தேரில் வீற்றிருக்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர், பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், கே ,வி ஜி, உமாமகேஸ்வரி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தங்கத்தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆலய பிரகாரத்தை வலம் வந்த தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தபோது பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என பக்தி பரவசத்துடன் முழங்கி அம்மனை வழிப்பட்டனர். பௌர்ணமி நாட்களிலும், பக்தர்கள் வேண்டுதல் காலங்களில் இந்த தங்கத்தேர் ஓட்டம் நடைபெறும் என ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தொடர்ந்து  இறையன்பர்கள், ஆன்மீகவாதிகள் புகழும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தங்க தேர் வெள்ளோட்டத்துக்கு முன் அமைச்சர் சேகர்பாபு தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.ஜெ.மூர்த்தி,டி.கே. சந்திரசேகர்,ஜான் பொன்னுசாமி, ஆ.சக்திவேலு, மாவட்ட நிர்வாகிகள் வி.பி.ரவிக்குமார், கே.வி.லோகேஷ், ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் முனுசாமி, சீனிவாசன்,அப்புன், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments