• Breaking News

    TNPL 2024 Final: முதல் முறையாக கோப்பையை வென்ற திண்டுக்கல் அணி

     

    சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய கோவை அணி வீரர்கள் ஆரம்பம் முதலே ரன் சேர்க்க தடுமாறினர். நிலைத்து நின்று ஆடி ரன் சேர்க்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்துக் கொண்டே இருந்தனர்.

     ஓரளவிற்கு நிலைத்து நின்று ஆடிய ராம் அரவிந்த் 27 ரன்களையும், அதீக் உர் ரஹ்மான் 25 ரன்களையும் சேர்த்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே சேர்த்தது. திண்டுக்கல் அணி சார்பில் சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி மற்ரு விக்னேஷ் புதூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.’எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான விமல் குமார் மற்றும் ஷிவம் சிங் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தனர். இருப்பினும் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் அஷ்வின் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ரன் சேர்த்த இந்திரஜித் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே, 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட, 52 ரன்கள் சேர்த்து அஷ்வின் பெவிலியன் திரும்பினார்.

    இறுதியில் சரத்குமாரின் அதிரடியான ஆட்டத்தால், 18.2 ஓவர்களிலேயே திண்டுக்கல் அணி இலக்கை எட்டியது. இதனால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற திண்டுக்கல், டிஎன்பிஎல் வரலாற்றில் முதல்முறையாக கோப்பைய வென்று அசத்தியது. அவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான, ராகுல் டிராவிட் கோப்பையை வழங்கினார். இதனிடயே, தொடர்ந்து மூன்றாவது முறையாக டிஎன்பிஎல் கோப்பயை வென்ற முதல் அணி என்ற, சாதனையை படைக்கும் வாய்ப்பை கோவை அணி தவறவிட்டது குறிப்பிடத்தக்கத்து.

    No comments