SRM பல்கலைக்கழக விடுதியில் போதை பொருள் புழக்கம்..... அதிரடி காட்டிய போலீசார்.....
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து காலையிலேயே குவிந்த போலீஸார், ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை கன்ட்ரோலுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அதே கல்லூரியை சேர்ந்த 30 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பொத்தேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரில் பிரபல எஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் விடுதி மற்றும் கல்லூரியை சுற்றியுள்ள விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 500 -க்கும் மேற்பட்ட போலீஸார் அதிகாலை 3 மணிக்கே அங்கு குவிந்தனர்.குறிப்பாக அந்த கல்லூரிக்குச் சொந்தமான ஆண்கள், பெண்கள் விடுதி, சுற்றியுள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர். மேலும் விடுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கல்லூரி வளாகம், விடுதிகள் என போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த கல்லூரியில் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்ததாக அந்த கல்லூரியில் படிக்கும் 30 மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநில மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இதே கல்லூரியை சேர்ந்த சில வட மாநில மாணவர்கள் நெடுஞ்சாலையில் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீஸார் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து வாடகைக்கு தங்கியிருக்கும் வீடுகளில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட மாணவர்களை சிறையில் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆங்காங்கே போதை பொருட்கள் ஒழிப்புக்கான ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அது போல் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் இந்த சோதனை அதிகரித்து வருகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த போதையால் பல வெறிச் செயல்களில் இளைஞர்களும் மாணவர்களும் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
No comments