• Breaking News

    போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை..... கூகுளுக்கு கேரள போலீசார் நோட்டீஸ்.....

     


    கேரளாவில் போலி லாட்டரி சீட்களை விற்பனை செய்யும், 60 ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து அகற்றுமாறு, கூகுளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.கேரள மக்களுக்கு லாட்டரி மீதான மோகம் அதிகம். அங்கு லாட்டரி டிக்கெட்டிற்கு அனுமதி உள்ளது. மாநில அரசே விற்பனையும் செய்து வருகிறது. தினமும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

    இந்நிலையில், 'கேரள மெகா மில்லியன் லாட்டரி' மற்றும் 'கேரள சம்மர் சாசன் டமாகா' போன்ற தலைப்புகளுடன் கேரளா மாநில லாட்டரி ஆன்லைனில் விற்பனை செய்வதாக விளம்பரங்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் பரப்பப்பட்டன.கூகுள் பிளே ஸ்டோரிலும் போலியான லாட்டரி விற்பனை செய்யும் 60 ஆப் செயல்படுகளை கேரளா போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே மோசடி கும்பலை சேர்ந்தவர்கள்.கேரள அரசு ஆன்லைன் லாட்டரி சீட்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும், ரூ.40 செலவழித்தால் ரூ.12 கோடியை வெல்ல முடியும்' என்று இந்த மோசடிப் பேர்வழிகள் செய்யும் விளம்பரங்களை நம்பி பலர் ஏமாறுகின்றனர்.இப்படி லாட்டரி வாங்குபவர்களை போனில் அழைக்கும் மோசடிப் பேர்வழிகள், உங்கள் லாட்டரி நம்பருக்கு பரிசு விழுந்துள்ளது. பரிசுத் தொகையை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.,) நிறுத்தி வைத்துள்ளது என்று கூறுவது வழக்கம்.பிரச்னையை சரிசெய்ய மேலும் நீங்கள் பணம் தர வேண்டும் என்று கேட்டு பணம் மோசடி செய்வதும் நீண்ட காலமாக நடக்கிறது. மக்களை நம்ப வைக்க, போலி ஆவணங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்புகின்றனர். படிக்காதவர்கள் மட்டுமின்றி, படித்தவர்கள் கூட, பேராசையால் இந்த ஜெகஜ்ஜாலக் கில்லாடிகளிடம் ஏமாந்து விடுகின்றனர்.

    இந்நிலையில், மோசடிப்பேர்வழிகளின் லாட்டரி விற்பனையை முடிவுக்கு கொண்டு வர கேரளா அரசும் முயற்சி எடுத்து வருகிறது. முதல் கட்டமாக, கேரளாவில் போலியான லாட்டரி சீட்களை விற்பனை செய்யும், 60 ஆப்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கேரள போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அத்தகைய ஆப்களின் விளம்பரங்களை அகற்ற பேஸ்புக், இன்ஸ்டா தாய் நிறுவனமான மெட்டாவுக்கும் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. என்ன தான் அரசு நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே, இத்தகைய மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து தப்பிக்க முடியும்.

    No comments