• Breaking News

    அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் விளையாட்டு விழா நடைபெற்றது


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின்  வெள்ளி விழாவை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள் அறந்தாங்கி மாதிரி மேனிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.செயாலாளர் ராஜா, பொருளாளர் விஸ்வமூர்த்தி, இணைச்செயலாளர் கார்த்திகேயன், துணைச்செயலாளர் காசிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் ரஜினி, பழனிராஜன், சிவகிருபாகரன், பார்த்திபராஜா, பரக்கத்துல்லா, வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக காரைக்குடி சாலையில் உள்ள சோதனைச்சாவடி அருகே ஒலிம்பிக் தீப ஓட்டம் தொடங்கும்  நிகழ்வு நடைபெற்றது. அறந்தாங்கி காவல் துணைக்கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் ஒலிம்பிக் தீப ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.பெரியகடை வீதி, கட்டுமாவடி முக்கம் வழியாக வந்த ஒலிம்பிக் தீப ஓட்டம் அரசு மாதிரி மேனிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.அங்கு தமிழன் அசோசியேஷன் நிறுவனர் டான் சத்தியமூர்த்தி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து,விளையாட்டுப்போட்டிகளைத்தொடங்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் மனோகர் ஒலிம்பிக் உறுதிமொழியை வாசித்தளிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். 38 பிரிவுகளில் 27 பள்ளிகளைச் சார்ந்த 630 மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர்.

    அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி சிறப்பு விருந்தினராக வருகை தந்து அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வர் இளையராஜா,அரசு மாதிரி மேனிலைப்பள்ளி உதவித் தலைமையாசிரியர் பழனியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப் பெற்றது.விளையாட்டுப்போட்டிகளில் அதிக வெற்றிப் புள்ளிகளைக் குவித்த வகையில் ஆடவருக்கான கேபி25 ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் கோப்பையையும், ரூபாய் 2025 ரொக்கப்பரிசையும் அறந்தாங்கி குரும்பக்காடு லாரல் மேனிலைப்பள்ளி மாணவர்களும்,மகளிருக்கான கோப்பை மற்றும் ரொக்கப்பரிசை அரசர்குளம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவியரும்  தட்டிச் சென்றனர்.முன்னதாகச் செயற்குழு உறுப்பினர் சங்கீத்குமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மககள் தொடர்பு அலுவலர் பழனித்துரை நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் சக்திகுமரன், வெங்கடேசன், கிரண், ஹர்ஷா, ராஜேஷ், விஷ்வா, சுபாஷ்சந்திரன், ஹரிபிரசாத், சுரேந்திரன், சிவராமன் உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.

    No comments