இந்திரா காந்தி விடுதலைக்காக விமானம் கடத்தியவர் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர் இந்திராவை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி விமானத்தை கடத்தியதில் நாடு முழுவதும் அறியப்பட்டார். நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், காலமானார். அவருக்கு வயது 71.லக்னோவில் வைக்கப்பட்டு உள்ள போலாநாத் பாண்டே உடல், பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் அஞ்சலிக்கு பின்னர் இன்று தகனம் செய்யப்படுகிறது. உ.பி.யின் முன்னாள் எம்.எல்.ஏ., முக்கிய பிரமுகராகவும் கட்சியினர் மத்தியில் செல்வாக்காக இருந்தவர்.
1978ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி IC 410 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 152 பேருடன் கொல்கத்தாவில் இருந்து புதுடில்லிக்கு புறப்பட்டது. லக்னோ வந்த போது, விமானத்தின் 15வது வரிசையில் இருந்து போலாநாத் பாண்டேவும், உடன் வந்த தேவேந்திர பாண்டேவும் எழுந்தனர். நேராக காக்பிட் எனப்படும் விமானியின் அறைக்குள் நுழைந்தனர்.பின்னர், நாங்கள் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். தமது கையில் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு, போலோநாத் பாண்டே விமானத்தை கடத்துவதாக அறிவித்தார். இந்திரா மற்றும் சஞ்சய் இருவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், சிறையில் உள்ள இந்திராவை விடுதலை செய்ய வேண்டும் என்பதே கோரிக்கை என்றார்.பதற்றம், பரபரப்புக்கு இடையில் விமானம் வாரணாசியில் இறங்கியது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது ஜனதா கட்சி. உ.பி. முதல்வராக இருந்த ராம் நரேஷ் யாதவை சந்தித்து கோரிக்கையை கூறினர்.
பலமணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், அரசு உறுதி அளிக்க, விமானம் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. கோரிக்கை ஏற்கப்பட்டதால் போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டே இருவரும் சரண் அடைந்தனர்.பின்னர் காலசக்கரங்கள் சுழல 1980ம் ஆண்டு இந்திரா பிரதமர் பதவியில் அமர்ந்தவுடன் அவர்கள் இருவர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டு உ.பி.யில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு முறை எம்.எல்.ஏ., ஆகவும் இருந்தார் பாண்டே. இப்போது பதவி எதிலும் இல்லாத நிலையில், உடல் நலமின்றி இருந்த பாண்டே காலமானார்.
No comments