• Breaking News

    கண்ணீர் வழிய டெல்லி வந்திறங்கினார் வினேஷ் போகத்.... ஆறுதல் சொல்லி தேற்றிய ரசிகர்கள்......


    பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் தங்கம் நிச்சயம் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்த வினேஷ் போகத் மல்யுத்தம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தகுதியிழப்பு நடவடிக்கை நாட்டு மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கடும் மன உளைச்சலில் தவித்த வினேஷ் போகத், இனி தம்மிடம் விளையாட சக்தி இல்லை என்று வேதனையுடன் கூறி, ஓய்வையும் அறிவித்தார்.

    தமக்கு வெள்ளிப்பதக்கம் தர வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் செய்த முறையீடும் தள்ளுபடி செய்யப்பட, மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளானார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளை முடித்துக் கொண்டு அவர் இன்று புதுடில்லி திரும்பினார்.

    விமான நிலையம் வந்த வினேஷூக்கு உறவினர்கள், ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஆட்டம், பாட்டம், மாலைகள் என பிரம்மாண்டமாக அனைவரும் வரவேற்றனர். எதிர்பாராத இந்த வரவேற்பை கண்டு ஒரு கணம் நெகிழ்ந்த வினேஷ், திடீரென கட்டுப்படுத்த முடியாமல் அனைவர் முன்னிலையில் கதறி அழ ஆரம்பித்தார். கண்களில் கண்ணீர் வழிய கதறிய அவரை அங்குள்ளவர்கள் ஆறுதல் கூறி, தேற்றி ஆசுவாசப்படுத்தினர்.

    பின்னர் சக வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உடன் திறந்த வெளி ஜீப்பில் நின்றபடியே கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றி கூறிய படியே தமது சொந்த கிராமமான பலாலிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு 12 முக்கிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    No comments