நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் யானை வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதாகவும், யானைகள் வழித்தடம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி கடந்த 2008-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட்டு, யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2018-ம் ஆண்டு யானை வழித்தடத்தில் உள்ள 38 தங்கும் விடுதிகளை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது. அதன்படி 38 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து யானை வழித்தட வழக்கில் மாவட்ட நிர்வாகமும், தமிழக வனத்துறையும் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கி இருப்பதாக விடுதி உரிமையாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளையும், அதன் உரிமையாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்ததை அடுத்து, தங்கும் விடுதிகள் குடியிருப்புக்கான உரிமத்தை பெற்று கட்டப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும், அவற்றை இடிக்கவும் கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், விசாரணை குழுவின் உத்தரவுப்படி, மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 11 தங்கும் விடுதிகள், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை, அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் பதிவு தபால் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
0 Comments