• Breaking News

    வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதுகாப்புக்கு..... பிரதமர் மோடியிடம் அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் உறுதி

     

    வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,” என பிரதமர் மோடியிடம் அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதிஅளித்துள்ளார்.

    நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர்.ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டத்தை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களில், 560 பேர் உயிரிழந்தனர்.

    இதன் எதிரொலியாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு அமைந்தது.இருப்பினும், அங்குள்ள ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசினார்.இந்த தகவலை தன் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இருநாட்டு தலைவர்கள் பேச்சு குறித்து வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில் கூறப்படுவதாவது:

    பிரதமர் மோடி - யூனுஸ் இடையிலான பேச்சில், இருதரப்பு உறவை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கான இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.

    பல்வேறு வளர்ச்சி முறைகள் வாயிலாக வங்கதேச மக்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர்வலியுறுத்தினார்.அங்குள்ள ஹிந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    அப்போது, வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, முகமது யூனுஸ் உறுதியளித்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, வங்கதேச இடைக்கால அரசின் உள்துறை அமைச்சக ஆலோசகர் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் சகாவத் ஹுசைன் நேற்று கூறுகையில், “வங்கதேசம் மத நல்லிணக்க நாடு. அனைத்து மதத்தினரும் எந்த பிரிவினையுமின்றி ஒன்றாக வளர்ந்த நாடு.

    “இங்கு சிறுபான்மையினரை தாக்குபவர்கள், துஷ்பிரயோகம் செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. வன்முறை, மோதல், வெறுப்பு போன்றவற்றிற்கு இங்கு இடமில்லை,” என்றார்.

    No comments