தலைமறைவான ஜாபர் சாதிக் மனைவி..... தீவிரமாக தேடும் அமலாக்கத்துறை அதிகாரிகள்......
தி.மு.க., நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், 36, என்பவர், வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளார். அவர் சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதற்கு, அவரது மனைவி அமீனா பானு, 32, சகோதரர் முகமது சலீம், 34, ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து, சென்னையில் நேற்று முன்தினம் முகமது சலீமை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். தொடர் விசாரணையில், அண்ணனுடன் சேர்ந்து, போதை பொருள் கடத்தல் வாயிலாக, முகமது சலீம், 100 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். அவரின் வங்கி கணக்கிற்கு, சட்ட விரோதமாக, 8 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டு இருப்பதை, அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
வி.சி., நிர்வாகியாக இருந்த முகமது சலீம், விலை உயர்ந்த ஜாகுவார் உள்ளிட்ட கார்களை வாங்கி பயன்படுத்தி வந்ததையும், அவர் சொகுசு வாழ்க்கை நடத்தியற்கான ஆதாரங்களையும், அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர்.அவர் கைதாகி உள்ள நிலையில், அமீனா பானு, சென்னை சாந்தோமில் உள்ள வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ''ெஹல்த் மிக்ஸ் பவுடர்' போல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜாபர் சாதிக், முகமது சலீம் குழுவினர் போதை பொருள் கடத்தியது தொடர்பாக, 2015ல் சென்னையிலும், 2018ல் மும்பையிலும், சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளனர்.
இதனால், அவர்கள் அந்த காலக்கட்டத்தில் இருந்து, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து, விசாரித்து வருகிறோம். அமீனா பானுவின் வங்கி கணக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால், அவரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments