தஞ்சை: அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து டிரைவர், கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்.... 3 பேர் கைது

 


தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் காளிதாஸ் என்பவர் ஓட்டினார். இதில் கண்டக்டராக தினசீலன் பணியில் இருந்தார். பஸ்சில் ஆண், பெண் என ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது ஒரு பைக்கில் வந்த 3 பேர் திடீரென பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். இதனால் டிரைவர் காளிதாஸ் பஸ்சை நிறுத்திவிட்டு,  எதற்காக பஸ்சை தேவையில்லாமல்  நிறுத்துகிறீர்கள்? என அந்த 3 பேரையும் தட்டி கேட்டார். இதில் இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட நிலையில் டிரைவர் காளிதாஸ் அந்த 3 பேரையும் பஸ்சை இப்படி நிறுத்துவதற்கு என்ன காரணம் என்று மீண்டும் கேட்டார்.இதில் ஆத்திரமடைந்த அந்த மூன்று பேரும் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து டிரைவர் காளிதாஸ், கண்டக்டர் தினசீலன் ஆகியோரையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.


இந்த தாக்குதலில் காளிதாஸ், தினசீலன் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடன் பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்கள் இ’ருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தஞ்சாவூா் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் சோதனை செய்தனர். இதன் மூலம் பஸ்சை தாக்கியவர்கள் விபரம் தெரியவந்தது.

பஸ்சை சேதப்படுத்தி டிரைவர், கண்டக்டரை தாக்கியவர்கள் தஞ்சையை சேர்ந்த சாரதி (21), முருகன் ( 37), விஜய் ( 22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சாரதி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், அரசு பஸ்சை ஓவர் டேக் செய்து சினிமாவில் வருவது போல் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது அவர்கள் 3 பேரும் போதையில் இருந்தது போல் தெரிய வந்தது. அரசு பஸ்சுக்கும் சேதம். பயணிகளுக்கும் மிகுந்த அச்சம் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments