மோடியின் அமெரிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000 இந்தியர் வம்சாவளியினர் முன்பதிவு
பிரதமர் மோடி அடுத்த மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அங்கு, ஐ.ஏ.சி.யு., எனப்படும் இந்தோ - அமெரிக்கன் கம்யூனிட்டி அமைப்பு நியூயார்க்கில் செப்., 22ல் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினரிடையே பேசுகிறார். அதைத் தொடர்ந்து, செப்., 26ல் ஐ.நா., சபையின் ஆண்டு கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.இது குறித்து, ஐ.ஏ.சி.யு., வெளியிட்டுள்ள அறிக்கை: 'மோடியும் அமெரிக்காவும்' என்ற தலைப்பில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நசாவு நினைவு அரங்கத்தில் அடுத்த மாதம் 22ம் தேதி பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தொழில், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் கலைத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரின் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும்.அனைத்து மதத்தினர் மற்றும் தமிழ், தெலுங்கு, பஞ்சாபி என இந்தியாவின் அனைத்து மொழி பேசும் மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
அவர்களிடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்துவார். 15,000 இருக்கைகள் கொண்ட இந்நிகழ்வுக்கு, நேற்று வரை அமெரிக்காவின் 42 மாகாணங்களிலிருந்து 24,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் இருக்கைகளை அதிகப்படுத்தி, பெரும்பாலானோர் பங்கு பெறும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments