• Breaking News

    காவலர் தாக்கியதில் கண் பார்வை இழந்த சிறுவன்..... ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

     


    மதுரையைச் சேர்ந்த லதா தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் பிரேம்நாத் (17), கடந்த 2016-ம் ஆண்டு ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் இருவர் உடன் அமர்ந்து சென்றனர். சமயநல்லூர் - விளாங்குடி சாலையில் சென்ற போது, தலைமை காவலர் வீரபத்திரன் இரு சக்கர வாகனம் ஒட்டிச் சென்ற எனது மகன் மீது லத்தியால் தாக்கியதில் கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தேன். ஆனால் எனது மகனின் வலது கண் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், அவரது படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே அரசு தார்பில் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரர் மகன் ஓட்டுநர் உரிமமின்றி, தலைக்கவசம் அணியாமல் இருவரை அமர செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். போலீசார் அவரது வாகனத்தை நிறுத்த முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மனுதாரரின் மகனுக்கு கண் பார்வை பிரச்னை தொடர்பாக மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவ குழுவினரிடம் பரிசோதிக்கப்பட்டதில் அவர் வலது கண் பார்வை இழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமை காவலர் வீரபத்திரன் இரு சக்கர வாகனத்தை தடுக்க முயன்றதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

    இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது.தலைமை காவலர் தனது பணியை செய்துள்ளார். அவர் மீது குற்றம் சுமத்த முடியாது. மனுதாரர், சிறுவனாகிய மகனை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதி வழங்கியிருக்க கூடாது. இது சட்டப்படி குற்றம். ஆனாலும் கண் பார்வை இழந்துள்ள மாணவருக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடை, மதுரை மாவட்ட ஆட்சியர் 6 வாரத்திற்குள் வழங்க வேண்டும்” இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    No comments