ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில் 37.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அப்பர் பவானி பகுதியில் 24.8 செ.மீ மழையும், எமரால்டு பகுதியில் 13.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சேரங்கோட்டில் 11.3 செ.மீ, மேல்கூடலூரில் 10.8, பந்தலூரில் 9.2, ஓவேலியில் 8.8, பாடந்துறையில் 8.5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் உதகை நகரில் பல இடங்கள், கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காற்று, கனமழையால் உதகை நகரில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மின்கம்பங்கள், வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது.உதகையில் ஆட்சியர் அலுவலக சாலை, கோக்கால், சேரிங்கிராஸ், தலைக்குந்தா சாலைகளில் மரங்கள் விழுந்தன. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
0 Comments