• Breaking News

    காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

     


    தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த 11ம் தேதி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு, கர்நாடகா அரசு வழங்க வேண்டிய நிலுவை தண்ணீரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.தமிழ்நாட்டின் முறையான கோரிக்கையை ஏற்ற காவிரி ஒழுங்காற்று குழு, கர்நாடகா அரசு காவிரியில் இருந்து 12ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாள் தோறும் 1டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது.

     இந்த உத்தரவை அடுத்து நேற்று முன் தினம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் அடிப்படையில் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது எனவும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக,கர்நாடகாவில் உள்ள காவிரியின் முக்கிய அணைகளில் ஒன்றான கபினி அணைக்கு நீர்வரத்து 19000 கன அடியாக அதிகரித்தது. 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் ஏற்கனவே 19 டிஎம்சிக்கு நீர் இருப்பு உள்ளதால், கபினி அணைக்கு வரும் நீரை சேமிக்க முடியாமல் அணையின் பாதுகாப்பு கருதி 20,000 கன அடி நீரை காவிரி ஆற்றில் கர்நாடக அரசு திறந்து விட்டது.

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு தீர்மானம் எடுத்த நிலையில், தற்போது வேறு வழியின்றி காவேரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட11,500 கன அடி நீரை கடந்து 20 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த சூழலில் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து இன்று மாலை அனைத்து கட்சி கூட்டமும் நடத்தப்படுகிறது.

    No comments