கணவரின் கோடிக்கணக்கான சொத்தை அபகரித்த மகன்.... மூதாட்டி மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கம்போஸ்ட் ஓடை தெருவை சேர்ந்தவர் தமயந்தி (77).இவரது கணவர் பொன்னுச்சாமி மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.இவருக்கு மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்த மூதாட்டி தமயந்தி தனது மூத்த மகனும் மருமகளும் தனது கணவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடு உள்ளிட்ட சொத்துக்களை தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கி அபகரித்துக் கொண்டதாகவும் அதனை மீட்டுத் தரும்படியும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.மேலும் அந்த மனுவில் அவர்,
தங்களுக்கு ரஞ்சித் குமார், விஜயகுமார், மற்றும் குமார் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.மூத்த மகனான ரஞ்சித்குமாரும்,அவரது மனைவி தனலட்சுமி ஆகியோரும் ஒட்டுமொத்த சொத்துக்களையும் தங்களது பெயரில் எழுதித் தருமாறு தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் தனது கணவருடன் தானும் மதுரையை விட்டு வெளியேறி மற்ற மகன்கள் இடம் வசித்து வந்ததாகவும்,தொடர்ந்து ரஞ்சித்குமாரும் அவரது மனைவி தனலட்சுமியும் சொத்தை தங்களது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி வற்புறுத்தியதால் அந்த மன வேதனையில் தனது கணவர் பொன்னுச்சாமி கடந்த 30.03.2019 அன்று இறந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் கடந்த 07.04. 2021 ஆம் ஆண்டு ரஞ்சித்குமாரும்,அவரது மனைவி தனலட்சுமி பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து போடும்படி தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், வற்புறுத்தி பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும், இதனைத் தொடர்ந்து சொத்துக்கள் அனைத்தும் மூத்த மகன் மற்றும் மருமகள் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே தன்னை பராமரிக்காமல் அடித்து துன்புறுத்திய மூத்த மகன் ரஞ்சித்குமார் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது கணவரின் சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.இதுகுறித்து தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், தன்மீதும்,தன் மனைவி மீதும் காவல் நிலையத்தில் எப்படி புகார் அளிக்கலாம்?என தமயந்தியின் மூத்த மகன் ரஞ்சித்குமார் மீண்டும் தமயந்தியை பலமுறை மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் 77 வயதான மூதாட்டி என்றும்,பெற்ற தாய் என்றும் பாராமல் மீண்டும் அவர் மீது தன் மேல் அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது,விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த தமயந்தி இன்று மீண்டும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது மூத்த மகன் ரஞ்சித்குமார் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது கணவரின் சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என மனு அளித்தார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments