வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட நல்லம்பாக்கம் பிரதான சாலைக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்
வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட நல்லம்பாக்கம் பிரதான சாலைக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதில் கடந்த 23 ஆண்டுகளுக்கு பின் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் மாணவர்கள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் வழியாக வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணையும் 14 கிலோ மீட்டர் கொண்ட மாநில ஊரக நெடுஞ்சாலைக்கு துறைக்கு சொந்தமான சாலை உள்ளது.
இதில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 750 மீட்டர் கொண்ட அருங்கால்-காட்டூர் சாலை, இதேபோல் 2 கிலோ மீட்டர் கொண்ட நல்லம்பாக்கம் பிரதான சாலை ஆகியவற்றை சீரமைக்க வனத்துறையினரிடம் சரியான முறையில் அனுமதி பெறாததால் கடந்த 23 ஆண்டுகளாக வனத்துறையால் கிடப்பில் போடப்பட்டது. மேற்படி சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், காரணைப்புதுச்சேரி, ஊனைமாஞ்சேரி ஆகிய ஊராட்சி பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், கிராமங்கள் முன்னேற்ற கழகம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களை திரட்டி அங்கப்பிரதட்சணம் போராட்டம், மன் சொறு சாப்பிடும் போராட்டம், சாலையில் நாற்று நடும் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கிராம சபை கூட்டங்களை புறக்கணித்தும் பயனளிக்காததால் கிராமங்கள் முன்னேற்ற கழகம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதிகள் மேற்படி சாலைகளை உடனடியாக அமைக்கும்படி அதிரடியாக உத்தரவிட்டனர். அதன் பேரில் கடந்த எம்பி தேர்தலுக்கு முன்பு அருங்கால்-காட்டூர் சாலை சீரமைக்கப்பட்டது. இதனையடுத்து எம்பி தேர்தல் நடைமுறையில் இருந்ததால் நல்லம்பாக்கம் பிரதான சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நல்லம்பாக்கம் பிரதான சாலையை தரமாக அமைப்பதற்காக தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட நல்லம்பாக்கம் பிரதான சாலையை சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஊனைமாஞ்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜே.வி.எஸ் ரங்கநாதன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் லோகநாதன், ஆப்பூர் சந்தானம், ஒன்றிய கவுன்சிலர் ஏவிஎம் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு-குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டு ₹.5 கோடி மதிப்பீட்டில் நல்லம்பாக்கம் பிரதான சாலையை சீரமைக்க அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட நல்லம்பாக்கம் பிரதான சாலைக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதில் கடந்த 23 ஆண்டுகளுக்கு பின் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments