மதுரை: குடிகார கணவனை அரிவாள் மனையால் வெட்டி கொலை செய்த மனைவி
மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர், கார்த்திக் (வயது 36). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர், ஆட்டோ ஓட்டி வந்தார். இவருடைய மனைவி கனிமொழி (30). இவர்களுக்கு, 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மது போதையில் கார்த்திக், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், அப்போது குழந்தைகளையும் அடித்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. நேற்றும் கார்த்திக் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து குழந்தைகளையும் தாக்கினாராம்.
இதனால், ஆத்திரம் அடைந்த கனிமொழி, சப்பாத்திக்கட்டை மற்றும் தோசைக்கல்லால் கார்த்திக்கை தாக்கினார். அரிவாள் மனையாலும் அவரை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கார்த்திக்கின் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கனிமொழியிடம் போலீசார் விசாரித்தபோது, குழந்தைகளை கொடுமைப்படுத்தியதால் ஆத்திரத்தில் கணவனை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கனிமொழியை கைது செய்தனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments