வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 58 வயது மதிக்கதக்க மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் துபாயிலிருந்து பேசுவதாக கூறினர், பின்பு புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் நரம்பியல் நிபுணருக்கான பணிக்கு நீங்கள் தேர்வாகியுள்ளிர்கள் என்று மருத்துவரிடம் கூறினர்.
இதனைத்தொடர்ந்து மர்ம நபர்கள் வீடியோ கால் மூலம் மருத்துவரை நேர்முகத்தேர்வு நடத்திய நிலையில், சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த நபர்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு அந்த நேர்முகத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் இதற்காக பதிவு கட்டணம் மற்றும் நிர்வாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினர். மருத்துவரும் அவர்களை நம்பி ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 684 அனுப்பி வைத்துள்ளார்.
பின்பு மருத்துவர் அவருடைய வேலை பற்றி கேட்டபோது மர்ம நபர்கள் அவர்களிடம் கூடுதலாக பணம் செலுத்தினால் மட்டுமே வேலை நிரந்தரமாக கிடைக்கும் என்று கூறினர். இதையடுத்து மருத்துவர் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டபோது அவர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments