பொன்னேரி அடுத்த பழவேற்காடு அரங்கம் குப்பம்த்தில் வலை எரிப்பு... மீனவர்கள் அச்சம், காவல்துறை விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி லைட் ஹவுஸ் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட அரங்கம் குப்பம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் படகுகள் மற்றும் வலைகள் நிறுத்துமிடத்திலிருந்து நெருப்புப் புகை வெளிவந்துள்ளது.மேலும் புகை பரவி பெரும் நெருப்பாக பற்றி எரிய தொடங்கியுள்ளது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவ்விடத்தில் பார்க்கும்போது மீனவர்கள் வலைக்கு சென்று விட்டு கரையில் வைத்திருந்த மீன்பிடி வலைகள் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து உடனடியாக கிராம நிர்வாகிகளிடமும் பொதுமக்களிடமும் தகவல் அளித்ததின் பேரில் அனைவரும் ஓடிச்சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அருகாமையில் உள்ள வலைகள் எரிந்து சாம்பலாகாமல் இருப்பதற்கு வலைகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் ஏராளமான மீன் பிடி வலைகள் எரிந்து சாம்பல் ஆனது. இதுகுறித்து உடனடியாக திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். திருப்பாலைவனம் காவல்துறையினர் விரைந்து வந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீன்வளத் துறை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு எப்படி இந்த தீ பரவியது என்பது குறித்தும் எவ்வளவு சேதாரம் என்பது குறித்தும் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 10 மீனவர்களுக்கு சொந்தமான மீன் பிடி வலைகள் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள் எரிந்து சாம்பலானதால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி வலைகளை நம்பி மீன்பிடித்த மீனவர்களுக்கு தங்களுக்கு சொந்தமான வலைகள் எரிந்ததால் தொடர்ந்து மீன் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அரசுத்துறை தக்க நடவடிக்கை மேற்கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும் இச்சம்பவத்தால் லைட்ஹவுஸ் கடற்கரை பகுதியில் உள்ள பெரும்பான்மையான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments