அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில், ரூ.12 கோடி மதிப்பிலான 30 புதிய அரசு பேருந்துகளின் சேவை துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
அமைச்சர்கள் சிவசங்கர், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கொடியசைத்து புதிய பேருந்துகளின் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தை, கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் எடுத்தும் முடிக்காமல் சென்றுவிட்டனர். பேச்சுவார்த்தை நடத்தி, சீர்குலைந்திருந்த ஊதிய விகிதத்தை சீர்படுத்தி, 5 சதவீத உயர்வு வழங்கி நல்ல நிலையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய பேருந்துகள் வாங்க ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இதில் 2,200 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஏற்கனவே 1,000 பேருந்துகள் மக்கள் சேவைக்கு வந்துவிட்டன. 300 பேருந்துகள் இந்த வாரத்திற்குள் வந்துவிடும். புதிதாக வரும் பேருந்துகளை ஒவ்வொரு பகுதியாக இயக்கி வருகிறோம். விருதுநகரில் இன்று 26 புறநகர் பேருந்து, 4 நகர் பேருந்து என மொத்தம் 30 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். பல்வேறு சிறப்புகள் உடைய போக்குவரத்து கழகத்திற்கு நிதியமைச்சர் உதவி வருகிறார். போக்குவரத்து கழகம் சிறப்பாக இயங்க நிதியமைச்சர் மேலும் உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், மேயர் சங்கீதா இன்பம், நகர்மன்ற தலைவர் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments