எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை
காவலில் எடுக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.100கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன்(28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் கடந்த 20ம்தேதி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணியளவில் திருச்சி சிறையில் இருந்து கரூர் அழைத்து வரப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிசிஐடி போலீசார் 3 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் நீதிபதி பரத்குமார், 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்றிரவு 12 மணி வரை சிபிசிஐடி போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதியம் 2.30 மணியுடன் நீதிமன்றம் வழங்கிய 2 நாள் காவல் முடிவதால் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
No comments