நீலகிரி: ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது

 

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தோட்டமூலா பகுதியை சேர்ந்தவர் உம்மு சல்மா(வயது 34). பட்டதாரி. இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 3.27 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு உம்மு சல்மாவின் தாயார் இறந்து விட்டார். கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் சகோதரர் இறந்து விட்டனர். இதனால் சொத்தில் தந்தையின் பங்காக 36 சென்ட் நிலம் உம்மு சல்மாவுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் அவரது பெரியப்பா வகையில் 6 சென்ட் நிலம் எழுதி கொடுக்கப்பட்டது.அதன்படி மொத்தம் 42 சென்ட் நிலத்தை எல்லை வரையறை செய்வதற்காக கடந்த 17.9.2023 அன்று கூடலூர் தாசில்தார் ராஜஸ்வரியிடம், உம்மு சல்மா விண்ணப்பித்தார். அதற்கு ரூ.820 கட்டணமும் செலுத்தினார்.

அதன் பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்காததால் 4.3.2024 அன்று ஐகோர்ட்டில் உம்மு சல்மா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு, 4-வது பிரதிவாதியாக கூடலூர் தாசில்தாரை நியமித்து உடனடியாக நில அளவீடு செய்து எல்லை வரையறை செய்யும்படி உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து தாசில்தார் ராஜேஸ்வரியை, உம்மு சல்மா அணுகினார். ஆனால் ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல் உம்மு சல்மாவிடம் தாசில்தார் ராஜேஸ்வரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டார். அதை கொடுக்காததால் அவரை அலைக்கழித்ததாக தெரிகிறது. இறுதியாக ரூ.50 ஆயிரம் லஞ்சம் தரும்படி தாசில்தார் ராஜேஸ்வரி கேட்டார்.எனினும் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத உம்மு சல்மா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனால் தாசில்தார் ராஜேஸ்வரியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர்.

அதன்படி நேற்று இரவு உம்மு சல்மாவிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து கூடலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜேஸ்வரியை சந்தித்து கொடுக்க கூறினர். மேலும் அங்கு ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளா, சப்-இன்ஸ்பெக்டர் சாதனா பிரியா மற்றும் போலீசார் பதுங்கி இருந்தனர்.உம்மு சல்மா லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி தாசில்தார் ராஜேஸ்வரியிடம் இவ்வளவு பணம் தான் என்னிடம் உள்ளது என கூறி கொடுத்தார். அதை தாசில்தார் ராஜேஸ்வரி வாங்கி கொண்டார். அப்போது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, கைது செய்யப்பட்ட தாசில்தார் ராஜேஸ்வரி, உம்மு சல்மாவிடம் ரூ.2½ கோடி சொத்துக்கு ரூ.2 லட்சம் கொடுத்தால் என்ன? எனக்கூறி பலமுறை லஞ்சம் கேட்டு வற்புறுத்தி உள்ளார். மேலும் பல நாட்களாக அலைக்கழித்துள்ளார். தற்போது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்ததால் தாசில்தார் ராஜேஸ்வரி கையும், களவுமாக சிக்கினார் என்றனர்.

Post a Comment

0 Comments