கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் மீனவர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்த நிலையில் அதற்கான தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 7-ம் தேதி சிறுமியின் தந்தை மற்றும் அண்ணன் கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றுவிட்டனர்.
அன்றைய தினம் இரவு சிறுமி தன்னுடைய தாயார் மற்றும் அக்காவுடன் தூங்கிய நிலையில் மறுநாள் காலை சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். அந்த சமயத்தில் வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்ததோடு கணவரின் பைக்கையும் காணவில்லை.இது தொடர்பாக சிறுமியின் தாயார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து சிறுமியை அவரின் தந்தையின் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது தெரியவந்தது. இந்நிலையில் சிறுமியின் செல் போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்தபோது சேலத்தில் அவர்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று சிறுமியை காவல்துறையினர் மீட்டனர்.
அப்போது சிறுமியை கடத்தி சென்றது 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.அதோடு இவர்கள் இருவரும் கடந்த இரண்டரை வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த நிலையில், இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் சிறுவன் சிறுமியை கடத்தி சென்றுள்ளான். மேலும் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிய காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.
0 Comments