• Breaking News

    ஓபிஎஸ் அணியிலிருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகல்.....

     

    அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்துள்ளது. அதிமுகவின் சின்னம், கொடி ஆகியவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இருக்கும் நிலையில், அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பலரும் தங்களை அதிமுகவினர் எனக் கூறி நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற அமைப்பிற்கு தலைமை வகித்து வருகிறார். அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி.பழனிசாமி தனியாக தொண்டர்களிடையே பேசி வருகிறார்.இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருந்த புகழேந்தி மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அடைந்த கடுமையான தோல்வி காரணமாக அதிருப்தியில் இருந்தனர்.

     எனவே அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் புகழேந்தி, ஜேசிடி பிரபாகர், கே.சி.பழனிசாமி ஆகியோர் சென்னையில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற புதிய அமைப்பை தொடங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, அதிமுகவை ஒற்றுமைப்படுத்தும் பணிகளில் இந்த குழு ஈடுபடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

    இன்னொரு தோல்வியை தாங்க அதிமுக தொண்டர்கள் தயாராக இல்லை எனவும், அப்படி தோல்வியை சந்தித்தால், தொண்டர்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் அப்போது தெரிவித்தனர்.

    No comments