சிவகங்கை கண்டதேவி கோவில் தேரோட்டம்..... திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் நடந்தது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் திருக்கோவிலாகும். சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த கோவிலில் 2006 முதல் 2023-ம் ஆண்டு வரை தேரோட்டம் நடைபெறவில்லை. தேர்த் திருவிழா நடத்தப்படாதது பக்தர்களிடையே ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா கடந்த 21.6.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கு பெற்று மகிழ்ந்தனர். பல்லாண்டுகளுக்குப் பிறகு சீரோடும் சிறப்போடும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை மூலம் நடத்தப்பட்ட இந்த விழா சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி இப்பகுதி மக்கள் அனைவருக்கும் பேருவகை அளித்துள்ளது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றதையொட்டி அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில், சிவகங்கை கண்டதேவி கோவில் தேரோட்டம் திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் நடந்தது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "18 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சிவகங்கை மாவட்டம் கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம், நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்புடன் நடைபெற்றது. 

இதற்காக அந்தப் பகுதி மக்கள் இன்று என்னைச் சந்தித்து மகிழ்ச்சிப் பெருக்கோடு நன்றி தெரிவித்தனர். ஓடாத திருவாரூர்த் தேரை ஓட்டிய தலைவர் கலைஞரின் மகனாகப் பெருமிதம் கொண்டேன்!" என்று அதில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments