பழனி அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று சாக்கடையில் விழுந்ததால் பரபரப்பு
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அரசுப் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும், பழுதாகி வருவதும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேருந்துகளை சோதனை செய்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து வேப்பன்வலசிற்கு நகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
வேப்பன்வலசு அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் இருந்த முன் இடதுபுற சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. அந்த சக்கரம் அருகில் இருந்த பெரிய சாக்கடையில் விழுந்தது. திடீரென சக்கரம் கழன்றதால் பேருந்து கடுமையாக தடுமாறியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கூச்சலிட்டு அலறினர். பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை உடனடியாக நிறுத்தியதால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று பழுதான பேருந்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் பழுது நீக்கும் பேருந்து வரவழைக்கப்பட்டு, பழுதான பேருந்து பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனிடையே, சக்கர கழன்று ஓடிய போது, அப்பகுதியில் குழந்தைகள், கால்நடைகள் இருந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாரிகள், பேருந்துகளை முறையாக ஆய்வு செய்து, பழுதின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments