• Breaking News

    குண்டும் குழியுமான சாலையை பேட்ச் ஒர்க் செய்யுங்கள்..... மயிலாடுதுறை நகராட்சிக்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை.....


     மயிலாடுதுறை நகராட்சியில் மக்கள் மிக அதிகமாக பயன்படுத்தும் சாலைகளில் ஒன்றான பெரிய கடை தெரு தருமபுரம் சாலையை  உடனே பேட்ச் ஒர்க் மூலம் சீரமைக்க சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை நகரத்தில் பிரதான சாலைகள் நன்றாக உள்ள நிலையில் பல உள்சாலைகள் மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. குறிப்பாக பெரிய கடை தெரு சாலை முதல் தருமபுரம் வரையிலான இரண்டு கிலோ மீட்டர் நீண்ட சாலை நிறைய பள்ளங்கள் ஏற்பட்டு மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் நடந்து செல்வதற்கும் கூட மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றது. 

    மயிலாடுதுறையிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் சாலையாக இச்சாலை விளங்குகின்றது. இச்சாலையை கடந்து தான் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி,  ஏவிசி கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஆயிரகணக்கான மாணவ மாணவிகள் தினமும் செல்ல வேண்டிய நிலை உள்ளன. மேலும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான சாய் விளையாட்டு அரங்கம், மகளிர் பள்ளி கல்லூரி விடுதிகள், மாவட்ட அறிவு சார்நூலகம் ஆகியனவும் அமைந்துள்ளன. 

    மேலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாய பெருங்குடி மக்கள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை தானியங்களை இதர உணவு பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக இச்சாலையை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மயிலாடுதுறை நகரத்தின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நெருக்கமான தெருக்களையும்  கொண்ட பகுதியாகவும் விளங்குகின்றது. இச்சாலை கோடிக்கண க்கான ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் போராட்டம் நடத்திய எதிரொலியாக மேம்படுத்தப்பட்டு குறைந்த ஆண்டுகளே ஆன பொழுதிலும், முற்றிலும் குண்டும் குழியுமாக தற்போது மாறி உள்ளதால் இச்சாலையை தொடர்ந்து தரமற்ற நிலையிலேயே ஒப்பந்தக்காரர்கள் போட்டு வருவதாக குற்றச்சாட்டு  எழுந்து வருகிறது. 

    சாலை போடப்பட்டு ஐந்து வருடங்கள் கூட ஆகாத நிலையில் இப்படிப்பட்ட அவல நிலை ஏற்பட்டதற்கு ஒப்பந்தக்காரர்கரே பொறுப்பேற்க வேண்டும் என்று விதி இருந்த பொழுதிலும் நகராட்சி நிர்வாகம் மேற்படி ஒப்பந்தக்காரரை வற்புறுத்தி சாலையில் ஏற்பட்டுள்ள மேடு பள்ளங்களை சரி செய்து தர உத்தரவிட வேண்டும். அல்லது பேட்ச் ஒர்க் எனும் அடிப்படையில் நகராட்சியே சீரமைத்து தர வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய வேண்டுகோளாக உள்ளது. 

    அதேபோல ஸ்டேட் பேங்க் ரோடு, நாராயண பிள்ளை தெரு, முதலியார் தெரு, செட்டி தெரு ஒட்டங்காலனி  தெரு, புதிய பழைய பேருந்து நிலைய வளாகங்கள், பட்டமங்கல ஆராய தெரு குருக்கள் பண்டார தெரு சில பகுதிகள் உட்பட பல்வேறு தெருக்களில் உள்ள பள்ளங்கள் மற்றும் குண்டும் குழிகளை உடனடியாக சீரமைத்து பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் நிம்மதியாக சாலையில் சென்று வர வழிவகை செய்து தர நகர மக்களின் சார்பில் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    No comments