விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் வேட்புமனு தாக்கல்

 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ-வாக இருந்தவர் நா.புகழேந்தி. இவர் உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 10ம் தேதி காலமானார்.

இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் நிறைவுற்ற பின்னர், விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத் தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சிகளின் தலைமை அறிவித்தது.

அதே நேரத்தில் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. நடிகர் விஜயின் தவெக வரும் 2026ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலே இலக்கு என தெரிவித்து விட்டது.இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று எதிர்பாராத திருப்பமாக, கடந்த 2022ம் ஆண்டு கள்ளக்குறிச்சி, கணியாமூர் பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் முன்கூட்டியே வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 64 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீமதி தாயார் செல்வி கூறுகையில், "தனது மகளை இழந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. என் மகளுக்கு ஏற்பட்டது, வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. பாமர மக்களுக்கு நீதி கிடைப்பது இந்த சமூகத்தில் மிகவும் கடினமாக உள்ளது. அதிகாரம் இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்." என்றார்.

Post a Comment

0 Comments