மின்சாரம் தாக்கி கோவை ஈஷா யோகா மைய பள்ளி மாணவன் உயிரிழப்பு
கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள சாடிவயல் பகுதியில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்த மைய வளாகத்திற்குள் ஈஷா வித்யா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, கல்வி பயின்று வருகின்றனர்.
நேற்று யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதை ஒட்டி இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் கோவை அவிநாசி சாலையில் உள்ள நேஷனல் மாடல் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர்.அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்த பின்னர் அருகில் உள்ள ஃபன் ரிபப்ளிக் மால் கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள ஈஷா யோக மையத்திற்கு சொந்தமான மையத்திற்கு சென்றிருந்தனர்.
அதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகுருநாத் என்பவரது 16 வயது மகன் மோச்சனாவும் ஒருவர் ஆவார். இவர் அங்குள்ள தண்ணீர் பைப் ஒன்றை திறக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது உடல் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கோவை பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
No comments