• Breaking News

    அமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டண உயர்வு

     

    நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் மற்றும் செப்டம்பர் மாதத்தில் கட்டணம் மாற்றியமைக்கப்படும். கடந்த ஏப்ரல் 1ம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.

    7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் கடந்த ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைந்தது. நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் ஜூன் 3ம் தேதி முதல் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டண மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு முழுவதும் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 34 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி-கருப்பூர் நெடுஞ்சாலை. கள்ளகம்-கருப்பூர் நெடுஞ்சாலை, வேலூர், விழுப்புரம் நெடுஞ்சாலை, திருவண்ணாமலை-விழுப்புரம் நெடுஞ்சாலை, கோவை கனியூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

    ஒருமுறை பயணிப்பதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்ப வருவதற்கான கட்டணங்கள் 5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    No comments