பேருந்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் நாகுரியில் உள்ள எஸ்கே குரூப் ஆப் கம்பெனியில் பொருட்களை விற்பனை செய்து வரும் இளம்பெண். நேற்று நாகுரியில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார். அந்தப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பேருந்தில் புறப்பட்டு ஸ்டேட் வங்கிக்கு அந்த இளம்பெண் வந்தடைந்தார்.
அங்கிருந்து பாஜ்பே செல்ல அந்த இளம்பெண் பேருந்தில் ஏறியுள்ளார். நடத்துநர் பக்கத்தில் இருந்த நான்காவது இருக்கையில் அந்த இளம்பெண் அமர்ந்திருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், இளம்பெண்ணின் இருக்கையின் பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் இடுப்பைப் பிடித்து அநாகரீமாக அந்த இளைஞர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், தனது உறவினர்களுக்கு இது தொடர்பாக செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் பேருந்தை பல்லால் பாக் பகுதியில் நிறுத்தினர். பின்னர், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை பேருந்தில் இருந்து இறக்கியதுடன் அடித்து உதைத்தனர்.இதனால் அவர் அலறித் துடித்தார்.
இதன் பின் பாண்டேஷ்வர் காவல் நிலையத்தில் அந்த இளைஞரை ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments