• Breaking News

    ராமநாதபுரம்: நடு ரோட்டில் ஆசிரியர் வெட்டி படுகொலை


    ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணன் (51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஹரிணி ஸ்ரீ மற்றும் சுபஸ்ரீ என்ற மகள்களும் இருக்கிறார்கள். இதில் கண்ணன் கே. பாப்பாங்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியின் முதல் நாளான நேற்று மோட்டார் சைக்கிளில் வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பி சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வந்து மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணன் அவர்களிடமிருந்து தப்ப முயன்றார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணனை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளியை பிடிக்க தனி படை அமைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில்  பாலமுருகன், வினோத்குமார், முருகன் மற்றும் அவருடைய அண்ணன் அரியப்பன் ஆகிய ‌4 பேரும் கொலை செய்தது தெரியவந்த நிலையில் பாலமுருகன் மட்டும் சிக்கியுள்ளார்.

    மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவரிடம் நடத்திய விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழிலில் கண்ணன் ஆர்வம் காட்டியுள்ளார். அப்போது சொத்துக்களை வாங்கி விற்றதில் அவருக்கும் வேறு சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் நடந்த தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    No comments